ஈரோடு மாவட்டம் ஆர்.கே.வி சாலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரணவ் ஜூவல்லரி செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஜுவல்லரி மூடப்பட்டது. இதனையடுத்து திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பிரணவ் ஜூவல்லரியில் தங்க நகை முதலீடு திட்டத்தில் மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பிரணவ் ஜூவல்லரியில் குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை செய்தனர்.
இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் பூட்டப்பட்டிருந்த பிரணவ் ஜூவல்லரியின் பூட்டை உடைத்த மாவட்ட குற்றப்பிரிவு (பொறுப்பு) காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையிலான காவல்துறையினர், திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், கம்மல் போன்ற தங்க நகைகள், ரூ.75 ஆயிரம் ரொக்கம், கம்ப்யூட்டர்கள், நகை மதிப்பீட்டு கருவி மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் சோதனை நடந்த சமயத்தில் தங்க நகை திட்டத்தில் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்தவர்கள் காவல் துறையினரிடம் புலம்பினார். சுமார் 8 மணி நேர சோதனைக்கு பிறகு பிரணவ் ஜூவல்லரியை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.