ஈரோடு மாவட்டம் குமிட்டாபுரம் பிரேஸ்வரர் கோயிலில், ஆண்டுதோறும் தீபாவளி முடிந்து மூன்றாம் நாள் சாணியடி திருவிழா நடத்தப்படும். தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் இப்பகுதி அமைந்திருப்பதால் இரு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் இதில் கலந்து கொள்வார்கள். நடப்பாண்டு சாணியடி திருவிழாவை முன்னிட்டு, சாணத்தை ஓரிடத்தில் சேமித்த கிராம மக்கள், அதனை டிராக்டர் மூலம் பிரேஸ்வரர் கோயில் முன்பு கொட்டினர்.
இதையடுத்து கோலாகலமாக திருவிழா தொடங்க குமிட்டாபுரம் குட்டையிலிருந்து உற்சவர் பிரேஸ்வரரை, கழுதையில் அழைத்து வரும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் அருகே மலைபோல் குவிக்கப்பட்டிருந்த சாணத்தின் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதை அடுத்து இளைஞர்கள் அதனை உருண்டையாக்கி ஒருவருக்கொருவர் வீசிக் கொண்டாடினர்.
பாரம்பரியமிக்க இந்த வித்தியாசமான திருவிழாவை, அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். விவசாயம் செழிக்க வேண்டியும், வன விலங்குகளிடமிருந்து தங்கள் கால்நடைகளை பாதுகாக்கவும் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக சாணியடி திருவிழா நடத்தப்படுவதாக குமிட்டாபுரம் கிராம மக்கள் தெரிவித்தனர்.