13 குழந்தைகளை பெற்றெடுத்தவருக்கு கடுமையான முயற்சிக்கு பிறகு சமரசம் செய்து குடும்பக் கட்டுப்பாடுக்கான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்கள் ஈரோடு அரசு மருத்துவர்கள்.
8 ஆண், 5 பெண்.. மொத்தம் 13 குழந்தைகள்!
அந்தியூர் வனச்சரகம் பர்கூரை அடுத்த ஒன்னகரை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சின்னமாதையன், சாந்தி என்ற பழங்குடியின தம்பதி. இவர்களுக்கு ஏற்கெனவே 12 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்த தம்பதிக்கு மீண்டும் குழந்தை பிறந்திருக்கிறது.
இப்படியாக 8 ஆண், 5 பெண் என மொத்தம் இந்த பழங்குடி தம்பதிக்கு இதுவரையில் 13 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் முதலாவதாக பிறந்த ஆண் பிள்ளைக்கு தற்போது 25 வயதாகி, அவருக்கு திருமணமாகி மனைவியுடன் வெளியூரில் வசித்து வருகிறார்.
13 குழந்தைகளும் சுகப் பிரசவம்!
இதனிடையே 13 குழந்தைகளையும் சாந்தி வீட்டிலேயே சுகப் பிரசவமாக பெற்றெடுத்திருக்கிறார். ஒரு முறை கூட மருத்துவமனைக்கு சென்றதில்லையாம். இதனையறிந்த அரசு மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் மாதையன் சாந்தி தம்பதியை சந்தித்து பரிசோதிக்க முயற்சித்திருக்கிறார்கள்.
ஆனால் மருத்துவர்களை கண்டதும் சாந்தி காட்டுப்பகுதிக்குள் சென்று ஒளிந்திருக்கிறார். மேலும் மாதையனும் மருத்துவர்களை கண்டித்து அனுப்பியிருக்கிறார். இதனையடுத்து அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் என பலரும் சின்ன மாதையனின் வீட்டுக்கு சென்று புதிதாக பிறந்த ஆண் குழந்தையை பார்வையிட்டு உடல் நலத்தையும் பரிசோதித்திருக்கிறார்கள்.
சரியான எடையுடன் ஆரோக்கியமான குழந்தை! ஆனால் தாய்?
மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்ததில் 13வது குழந்தை 3 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதை கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், குழந்தையின் தாயான சாந்தியின் உடல்நிலையை பரிசோதித்ததில் அவருக்கு ரத்த சோகை இருப்பதால், மாதையனை குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் முரண்டு பிடித்த மாதையனிடம் அதிகாரிகள் பலரும் சுமார் 3 மணிநேரத்துக்கு பேச்சுவார்த்தை நடத்தி போராடி குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்துக்கொள்ள சம்மதிக்க வைத்திருக்கிறார்கள்.
இதனையடுத்து அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு மாதையனுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முடிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.
குடும்பக் கட்டுப்பாடு குறித்து தவறான புரிதல்!
ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்துக் கொள்வதால் ஆண்மை குறைபாடு ஏற்படும் என்ற தவறான புரிததாலும், பழங்குடியினரிடையே உள்ள போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அடுத்தடுத்து கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றெடுப்பதால் பெண்களின் உடல்நிலையே அவதிக்குள்ளாகும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.