சிலைக்கடத்தல் பிரிவில் ஐஜியாக இருந்து ஓய்வுபெற்ற பொன் மாணிக்கவேல், தோட்டாக்கள் நிரப்பிய தனது கைத்துப்பாக்கியை ரயிலில் தவறவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு காளைமாடு சிலை அருகே ஒரு நிகழ்ச்சிக்கு பொன். மாணிக்கவேல் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக ஏற்காடு விரைவு ரயில் மூலம் அவர் ஈரோடு ரயில் நிலையத்திற்கு சென்று சேர்ந்தார். சிறிது நேரத்திலேயே தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த 8 தோட்டாக்கள் நிரப்பிய கைத்துப்பாக்கியை காணவில்லை என ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து காவல் துறையினர் அவர் வந்த ரயில் பெட்டியில் சோதனை நடத்தினர். அப்போது அவர் அமர்ந்திருந்த இருக்கை அருகிலேயே அவரது கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை கவனக்குறைவாக அவர் தனது இருக்கையிலேயே விட்டுச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து பொன். மாணிக்கவேலின் துப்பாக்கி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.