இனியும் பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது என்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மூலம் திமுகவிற்கு உணர்த்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோடு திண்டல் பகுதியில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி, வேட்பாளர் தென்னரசை அறிமுகப்படுத்தி உரை ஆற்றினார். அப்போது அவர் பேசும் போது...
தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதியை எதிர்நோக்கி பார்த்து கொண்டிருக்கின்றது, ஈரோடு வெற்றி அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். ஏற்காடு இடைத் தேர்தலுக்குப் பிறகு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக இந்தியாவிலேயே 3-வது மிகப்பெரிய கட்சியாக வந்தது. அதேபோல் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
21 மாத திமுக ஆட்சியில் ரவுடிகள் அட்டகாசம், போதை பொருள் விற்பனைதான் அதிகரித்தது. திமுக எந்த சாதனையும் செய்யவில்லை. ஈரோடு தொகுதிகளில் ஒரு துறும்பைகூட கிள்ளிப் போடவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி ஜவுளி தொழில் நிறைந்த தொகுதி. இங்குள்ள நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க, அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கினோம். தற்போது திமுக அரசு வேட்டி சேலை ஆர்டர் வழங்காததால் விசைத்தறி தொழிலார்கள் வேலை இழந்துவிட்டனர். விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு விட்டன.
அதிமுக கூட்டத்திற்கு வரும் பொதுமக்களை ஆடு மாடுகள் போல் மண்டபத்தில் திமுகவினர் அடைத்து வைத்துள்ளனர். அதனை காவல் துறையினர் கண்டுகொள்ளவில்லை. காவல்துறை கண்காணிப்பாளர் மாவட்டச் செயலாளர் போல் நடந்து கொள்கிறார். ஆட்சி மாறும், காட்சி மாறும். ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் எதிர்விளைவை சந்திக்க நேரிடும். சீப்பை ஒழித்துவைத்தால் திருமணம் நிற்காது. அதேபோல் அதிமுக வெற்றியை தடுக்க முடியாது. எவ்வளவு பணம் தந்தாலும் தேர்தல் நேரத்தில் இரட்டை இலைதான் கண்ணுக்குத் தெரியும்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டத்தைதான் முதல்வர் திறந்து வைத்து வருகிறார். தந்தைக்கு நினைவுச் சின்னம் அறிவித்ததும், பேனா வைக்க நிதி ஒதுக்கியதுதான் இவரது சாதனை. கடலில்தான் பேனா வைக்க வேண்டுமா. நினைவிடத்தில் 2 கோடியில் பேனா வைத்துவிட்டு மீதியை மக்களுக்கு செலவிடலாமே. பொங்கல் தொகுப்பில் 500 கோடி ஊழல் நடத்தி உள்ளனர். அதைத்தான் இப்போது தேர்தலுக்கு செலவிடுகின்றனர். அது உங்கள் பணம், வாங்கிக் கொள்ளுங்கள். வாக்கை இரட்டை இலைக்கு போடுங்கள்.
திமுகவுக்கு தில், திரானி இருந்தால் 21 மாத ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை சொல்லுங்கள் என்று சவால் விட்ட அவர், நாட்டில் எவ்வளவு பிரச்னை உள்ள நிலையில் உதயநிதியின் திரைப்படத்தை பற்றி விமர்சனம் பேசுகிறார் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தால் 180 திரைப்படங்கள தியேட்டர் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. ஈரோடு வெற்றி மூலம் திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.
10 ஆண்டுகளில் அதிமுக 4,80,000 கோடி கடன் வைத்து விட்டதாகவும், திமுக வந்தால் கடனை அடைப்போம் என்று கூறினார்கள். ஆனால் இப்போது இரண்டு ஆண்டுகளில் 1,62,000 கோடி கடன் வாங்கி வைத்துள்ளனர். தேர்தல் போது 520 அறிவிப்புகள் தந்து ஏமாற்றிய திமுகவுக்கு இந்த தேர்தல் வெற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும். இனிமேலும் பொய்வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது என்பதை இந்த தேர்தல மூலம் காட்டுங்கள்.
இதனிடையே அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த ஐஜேகே கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன், ஆளும் திமுக மீது பொதுமக்கள் தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அதிமுக கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது என்று தெரிவித்தார். பேட்டியின் போது ஐஜேகே முதன்மை அமைப்புச் செயலாளர் வெங்கடேசன், மாநில இளைஞரணி செயலாளர் வரதராஜன், மகளிர் அணி செயலாளர் அமுதா, ஈரோடு மாவட்ட தலைவர் லாரன்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.