ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அண்மையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த மார்ச் 10ம் தேதிதான் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார். அதன்பிறகு கட்சி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கடந்த மார்ச் 15ம் தேதி லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் அன்றைய தினமே சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர் சிகிச்சையில் இருந்த இளங்கோவனின் உடல் நிலை சரியானதை அடுத்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து உடல்நலம் தேறிய நிலையில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இப்படி இருக்கையில், அவருக்கு கரோனரி தமனி நோய் எனும் இதயத்திற்கு செல்லும் முக்கியமான ரத்தக்குழாயில் தொற்று உள்ளதோடு, லேசான அறிகுறிகளோடு கொரோனா வைரஸ் தொற்றும் ஏற்பட்டிருப்பதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.