செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூர் அருகே காலிங்கராயன் நகரில் நந்தகுமார் (62), அவரது மகன் மோத்தி (44) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வரும் மோத்தி, கடந்த ஐந்து மாதங்களாக வீட்டில் தங்கி பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் சித்தோடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கட்டிலுக்கு அடியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சடலமாக கிடந்த நந்தகுமாரின் உடலை மீட்டுள்ளனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
நந்தகுமாரின் மகன் மோத்தியிடம் நடத்திய விசாரணையில், நந்தகுமாருக்கும் அவரது மனைவி கிருஷ்ணாபாய்க்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால் மோத்தி தனது தாய் கிருஷ்ணாபாயை ஜவுளி நகரில் வாடகைக்கு வீட்டில் தங்க வைத்துள்ளார். மேலும் அவருக்குத் தேவையான மளிகை பொருட்களை வாரம் ஒருமுறை வாங்கிக் கொடுத்ததோடு வீட்டை பூட்டி விட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
இதனையடுத்து கிருஷ்ணாபாய் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்ற போலீசார், எலும்பும் தோலுமாக இருந்த கிருஷ்ணாபாயை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மோத்தி வெளியே செல்லும்போது தனது தந்தையை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கழிவறையில் வழுக்கி கீழே விழுந்த நந்தகுமாரை என்ன செய்வதென தெரியாமல் கை கால்களை கட்டிப் போட்டதாக தெரிவித்துள்ளார்.
நந்தகுமார் கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தாரா?, கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், மோத்தி மனநலம் பாதிக்கப்பட்ட நபராக இருக்கக்கூடும் என சந்தேகித்துள்ளனர்.