ஈரோடு அருகே கொடுமுடியை அடுத்த தாமரைப்பள்ளம் அங்கன்வாடி மையம் மற்றும் அரசுப் பள்ளி சத்துணவு கூடங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு சமைக்கப்பட்ட முட்டைகள் தரமற்றதாக இருப்பது தெரியவந்தது. அவற்றை மாணவர்களுக்கு வழங்கக் கூடாது என உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், தரமற்ற முட்டைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதேபோல், மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடியில் உள்ள மற்ற சத்துணவு கூடங்களிலும் தரமற்ற முட்டைகள் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவற்றை திருப்பி அனுப்பி புதிய முட்டைகளை விநியோகம் செய்யம மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.
முட்டைகளை விநியோகம் செய்யும் ஒப்பந்த நிறுவனங்கள் தரமான முட்டைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், புகார்கள் எழும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். மாணவர்களுக்கு சத்துணவுக்காக வழங்கப்படும் முட்டைகளின் தரத்திலேயே பிரச்னை இருப்பது, பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.