ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும் என பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்கு கேட்டு இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டார். அப்போது சம்பத் நகர் பகுதியில் பரப்புரை செய்யவந்த முதல்வருக்கு மேளதாளங்களுடன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, எங்கள் உயிரரோடு கலந்த ஊர் ஈரோடு. திமுகவின் அடித்தளமே ஈரோடு தான். திமுக ஆட்சிக்கு வரணும் என்று வாக்களிக்காதீர்கள். தேர்தல் அறிக்கையில் சொன்தையும் சொல்லாததையும் ஸ்டாலின் செய்வான் என்றார்.
தொடர்ந்து இந்தியாவிலேய எங்குமே இல்லாத அளவில் மகளிருக்கு பேருந்தில் இலவச பயணத்திட்டம் உள்ளிட்டவை திமுக ஆட்சிக்கு வந்தபிறகு செய்த அரசு திட்டங்களை பட்டியலிட்டார். தொடர்ந்து, நீட் விலக்கிற்கு தமிழக சட்டமன்றத்தில் இரண்டு முறை சட்டம் நிறைவேற்றியும், ஆளுநர் அதனை ஏற்றுக்கொள்ளாமல், மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் உள்ளது. என் லட்சியம் என்னுடைய காலத்திலேயே நீட்டிற்கு நிச்சயம் விலக்கு பெற்றே தீருவேன் என்பதே.
திமுக 2 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ள திட்டங்களை நான் பட்டியலிட்டேன். இவைகள் எதிர்கட்சித் தலைவருக்கு தெரியவில்லை என்றால் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்க்கவும். அறிவித்த திட்டங்கள் மீதமுள்ளவற்றை ஸ்டாலினாகிய நான் நிறைவேற்றுவேன். மகளிருக்கான உரிமைத்தொகை மாதம் ரூ.1000 வருகிற மார்ச் மாத நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க உள்ளோம்.
இங்கு உதயநிதி பரப்புரை மேற்கொண்டபோது உங்களிடம் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவனை வெற்றிபெற வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். நான் உங்களிடம் கேட்டுக்கொள்வது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று பேசினார்.