ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியிடவில்லை என கூறிய ஈவிகேஎஸ் வேட்பாளாராக அறிவிப்பு! என்ன நடந்தது?

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியிடவில்லை என கூறிய ஈவிகேஎஸ் வேட்பாளாராக அறிவிப்பு! என்ன நடந்தது?
ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியிடவில்லை என கூறிய ஈவிகேஎஸ் வேட்பாளாராக அறிவிப்பு! என்ன நடந்தது?
Published on

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற குழப்பம் நீடித்துவந்த நிலையில், தற்போது போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளாராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நேற்று காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து இந்த தொகுதி தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வந்தனர்.



இந்தநிலையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று இரவு நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், தங்கபாலு, சட்டமன்ற உறுப்பினர் அசன்மவுலானா மற்றும் கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்தும், வெற்றி வாய்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது‌.

இந்த கூட்டத்துக்கு பிறகு மீண்டும் மற்றொரு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. அதற்குபிறகே வேட்பாளர் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் இறுதி செய்து தெரிவித்தப்பின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் 2-ஆவது மகன் சஞ்சய் சம்பத் வேட்பாளராக களம் இறங்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கசிந்தன. மேலும் ஏற்கனவே செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இந்த சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும், இளைஞருக்கு காங்கிரஸ் தலைமை போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், கட்சி தலைமை விரும்பினால் எனது இரண்டாவது மகன் தேர்தலில் போட்டியிடுவார் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, தற்போது ஒருமனதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com