ஈரோடு: போலீஸ் போல் நடித்து வயதான தம்பதியிடம் நகை திருட்டு - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
ஈரோட்டில் வயதான தம்பதியரிடம் போலீசார் போல் நடித்து கவனத்தை திசைதிருப்பி 14.5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நல்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சென்னியப்பன். இவர் தனது மனைவி சரஸ்வதியுடன் இன்று ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது உறவினரை பார்ப்பதற்காக முத்துக்கருப்பண்ணன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், வயதான தம்பதியரிடம் தங்களை போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு இந்த பகுதியில் அடிக்கடி கொலை கொள்ளைகள் நடப்பதாகவும் மூதாட்டி சரஸ்வதியின் நகைகளை கைப்பையில் வைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இதனை கேட்ட மூதாட்டி சரஸ்வதி தனது தாலிக்கொடி, வளையல் உள்ளிட்டவைகளை கழட்டியபோது மர்மநபர்களில் ஒருவர் உதவுவது போல நடித்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே நகைகளை திருடியுள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று நகை வைத்த பையை பார்த்தபோது நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அந்த வயதான தம்பதி புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டிஎஸ்பி ராஜூ தலைமையில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நகரத்தின் மையப்பகுதியில் போலீசார் எனக்கூறி கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.