கோடநாடு கொலையை சரியாக விசாரணை செய்யாதவர் எடப்பாடி பழனிச்சாமி, இவர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறுவதை ஏற்க முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்திருக்கிறார்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் தலைவரை உட்கட்சி தேர்தல் நடத்தி நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபில் கூறிய கருத்துக்கு பதில் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத தலைவர் சோனியா காந்தி, அவர்தான் எங்களுக்கு தலைவர். இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபில் கூறியது தவறான கருத்து, பாஜக ஆசையை நிறைவேற்றும் செயல். இதை பொது வெளியில் சொல்லக்கூடாது, இதை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது” என தெரிவித்தார்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள கருத்துக்கு பதிலளித்த அவர், “சட்டம்-ஒழுங்கு மீது தமிழ்நாடு அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. டிஜிபி 4 ஆயிரம் ரவுடிகளை கைது செய்து உள்ளே தள்ளியுள்ளார், கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை” என்று தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய அவர், “உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையில் குறைபாடு என்பது இருக்கத்தான் செய்யும், இருந்தபோதிலும் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அதை பற்றி கவலைப்படவில்லை, இப்போது கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பாடுபட வேண்டும்.
தமிழக முதல்வரின் செயல்பாடு நன்றாக உள்ளது, ஆரம்பத்தில் இந்த அளவிற்கு திட்டமிட்டு செயல்படுத்துவது என்பது சிரமமான காரியம், ஆனால் திறம்பட செயல்பட்டு வருகிறார். ஒருபுறம் பொருளாதார நெருக்கடி, மறுபுறம் தேர்தல் வாக்குறுதியான குடும்ப அட்டைக்கு நான்காயிரம் வழங்கியதை முக்கிய உதவியாக பார்க்கிறேன். கொள்கை ரீதியாக வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானம், நீட்டிற்கு எதிரான தீர்மானம் உள்ளிட்ட மூன்று தீர்மானங்களை சட்டசபையில் கொண்டு வந்தது பாராட்டுக்குரியது. இதை கடந்த ஆட்சியில் அதிமுக செய்யவில்லை, இது எல்லாம் பாரதிய ஜனதா கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டும் தீர்மானங்கள், இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது” என தெரிவித்தார்