கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை ஆணையம், சம்பவம் பற்றி முழுமையாக விசாரித்து பரிந்துரைகளை 3 மாதங்களில் வழங்கும் என்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேசமயத்தில் மெத்தனால் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பதற்கான மூலக்காரணத்தை ஆராயவும், அதன் இருப்பைக் கண்டறிந்து அவற்றைக் கைப்பற்றி அழித்திடவும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் மீதும், காவல்துறையின் மீதுமே பாதிக்கப்பட்டவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட மரணம் என தகவல் கொடுத்தும், நிர்வாகமும், காவல்துறையும் போதுமான நடவடிக்கை எடுக்காததே இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த விவகாரத்தில் கடுமையாக அரசை கடுமையாக குற்றம்சாட்டுகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக தான் சுட்டிக்காட்டி வந்தும், ஏற்கெனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சாடியுள்ளார். "கள்ளச்சாராயம் இல்லை - மெத்தனால்" என்று சொன்னது போல, மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல், கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும் அதனை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இத்தனை அதிகமானபேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது. எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த விவகாரத்திற்குப் பின்னால் ஆளும்கட்சியைச் சேர்ந்த கும்பல் இருப்பதுபோல் தெரிகிறது. அப்படி இல்லையென்றால் இத்தனை துணிச்சலாக காவல்நிலையத்திற்கு அருகிலேயே கள்ளச்சாராய விற்பனை நடைபெறுமா? இன்னும் எத்தனைபேர் சிகிச்சை பெற்று குணமடைவார்கள் என தெரியவில்லை.
இதுவரை இந்த திமுக அரசில் எத்தனைபேர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நேற்று பேட்டி கொடுக்கிறார்.. கள்ளச்சாராய விற்பனை குறித்து தகவல் கிடைத்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம் என சொல்கிறார்கள்.
எங்களது கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் 5 தினங்களுக்கு முன், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் அவரை நேரில் சந்திக்கும்போதுகூட இதுகுறித்து தெரிவித்துள்ளார். அரசுக்கு தகவலைக் கொடுத்தார், ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டப்பேரவையிலும் இதுதொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார். இதுதொடர்பாக விவாதித்திருந்தால் எதாவது நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
தகவல் கிடைத்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம் என சொல்கிறார் அமைச்சர்.. கவன ஈர்ப்புத் தீர்மானத்தையே எடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள் நடமாடுகிறது. கள்ளச்சாராயம் ஆறுபோல் ஓடுகிறது. இதற்கெல்லாம் பொறுப்பேற்றுக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, உயிரிழந்தோர் வீடுகளுக்குச் சென்று எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.