``ஆதீனங்களின் விஷயங்களில் இந்த அரசு மூக்கை நுழைக்கிறது” - திமுக மீது இபிஎஸ் சரமாரி புகார்

``ஆதீனங்களின் விஷயங்களில் இந்த அரசு மூக்கை நுழைக்கிறது” - திமுக மீது இபிஎஸ் சரமாரி புகார்
``ஆதீனங்களின் விஷயங்களில் இந்த அரசு மூக்கை நுழைக்கிறது” - திமுக மீது இபிஎஸ் சரமாரி புகார்
Published on

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றுள்ளார்.

முன்னதாக தருமை ஆதீனம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. சீர்காழியை அடுத்த திருவெண்காடு புதன் ஸ்தலமான ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் கோவில் மற்றும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு வழிபாடு செய்துள்ளார். அதிமுக கழக நிர்வாகிகள் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ள மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருகை புரிந்த எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி சீர்காழியை அடுத்த திருவெண்காடு ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் (புதன் ஸ்தலத்தில்) சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அக்னி தீர்த்த குளத்தில் புனித நீர் தெளித்துக் கொண்டு சுவேதாரண்யேஸ்ஸ்வரர் சுவாமி, பிரம்ம வித்யாம்பிகை, அகோர மூர்த்தி சுவாமி, புதன் பகவான், காளி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தார். கோயிலுக்கு சென்றிருந்த பக்தர்கள் எடப்பாடி பழனிச்சாமி இடம் செல்பி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோயிலில் கோபூஜை, கஜபூஜை செய்து சுவாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்ற பின்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “மயிலாடுதுறை மக்களின் நீண்டநாள் கோரிக்கையையும், அப்போதைய நமது எம்.எல்.ஏ.க்களின் வேண்டுகோளையும் ஏற்று அதிமுக ஆட்சியில் மயிலாடுதுறை தனிமாவட்டமாக அறிவித்தோம். அதற்கான இடத்தை தருமை ஆதீனம் வழங்கியது. மேலும் கட்டடத்திற்கான அரசாணை வெளியிட்டோம். அதன்பிறகு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால், தற்போது கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. ஆக இது அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

தமிழகத்தில் ஹைட்டோகார்பன் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது திமுக அரசுதான். அதனை தடுத்து நிறுத்த சட்டப்போராட்டம் நடத்தியவர் ஜெயலலிதா. அவர் வழியில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம். 50 ஆண்டுகாலமாக தீர்க்க முடியாத காவிரிநீர் பிரச்னைக்கு சட்டபோராட்டம் நடத்தி தீர்வுகண்டோம். அதனாலேயே அதிமுக ஆட்சிகாலத்தில் ஏரி, குளம், ஆறுகள் முழுமையாக தூர்வாரியத்தால்தான் மழைநீர், காவிரிநீரை சேமிக்க முடிந்தது. இந்த அரசு அதை செய்வதில்லை” என்றார்.

தொடர்ந்து ஆதீன விஷயத்திலான இந்து அறநிலையத்துறையின் நடவடிக்கைகள் குறித்துப் பேசுகையில், “எல்லா மதத்தையும் அரசு சமமாக நடத்த வேண்டும். ஆண்டாண்டுகால கோயில் வழிமுறைகளில் தலையிட கூடாது. ஆதீனங்களின் விஷயங்களில் மூக்குநுழைக்க இந்த அரசு முயற்சிக்கிறது. 500 ஆண்டுகாலமாக பட்டணபிரவேசம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஆனால் இப்போது திமுக அரசு அதற்கு தடைவிதித்தது. அதனை கண்டித்து குரல்கொடுத்ததோடு, சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தோம் நாங்கள். பல்வேறு அரசியல் கட்சிகளம், மக்களும் எதிர்ப்பு தரிவித்ததால் பின் உணர்ந்து தமிழக அரசு இறங்கி வந்து அனுமதிகொடுத்தது. திமுக அரசு எதைபற்றியும் கவலைப்படவில்லை என்பதே உண்மை. தங்கள் குடும்பம் செழிக்க வேண்டும், எந்தெந்த துறையில் வருமானம் வரும் என்றுதான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களை பற்றியும், விவசாயிகள் பற்றியும் சிந்திக்கவில்லை.

ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த குழைந்தகள் எல்கேஜி, யுகேஜி கல்வி படிக்க வேண்டுமென்று அதிமுக இத்திட்டத்தை கொண்டுவந்தது. அதனையும் இந்த அரசு முடக்க நினைத்தனர். அதற்கு கடும் எதிர்ப்பு வந்ததால் மீண்டும் இயங்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் மூட்டைகளை திறந்தவெளியில் கொண்டுவந்து அடுக்கிவைத்ததால், விற்பனை செய்ய முடியாமல் சேதமடைந்தது. கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை அரசு முறையாக பாதுகாக்கவில்லை என்பதே இதன் பின்னணி. இப்போது லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் சேதமடைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசு செயலற்ற அரசாக இருந்துகொண்டு இருக்கிறது.

விவசாயிகளிடம் முறையாக நெல் கொள்முதல் செய்யாதது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு தேவைக்கு ஏற்ப உரங்களை வாங்கி கையிருப்பு வைக்காததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயத்தை பற்றி தமிழக முதல்வருக்கு எதுவும் தெரியாது. அவர் வீட்டைபற்றிதான் அவருக்குத் தெரியும்.

சசிகலா அதிமுகவில் உறுப்பினர் இல்லை. அவருக்கும், அதிமுகவிற்கும் சம்பந்தமில்லை. தமிழகத்தில் ஆளும்கட்சியை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் எதிர்கட்சிதான். ஆனால் பிரதான எதிர்கட்சி அதிமுகதான். இது 2021 சட்டசபை தேர்தலிலேயே நிரூபனமானது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com