அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக பொன்விழா மாநாட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்த நிலையில், திமுக இளைஞரணி மாநாடு மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அரசியலில் கத்துக்குட்டியாக இருந்து கொண்டு அதிமுகவை விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்கவோ, முடக்கவோ முடியாது” என்றார்.
பின் தென் மாவட்ட கனமழை குறித்து பேசிய அவர், “புயல் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறிய பின்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைதிமுக அரசு மேற்கொள்ளவில்லை. மீட்பு பணியையும் அரசு முறையாகச் செய்யவில்லை.
மத்தியில் யார் ஆட்சி நடத்தினாலும், தமிழகத்தை மாற்றாந்தாய் மனதோடு மட்டுமே பார்க்கின்றனர். பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என தெளிவு படுத்திவிட்டோம். தேசிய கட்சிகளை நம்பி பிரயோஜனமும் இல்லை” என்றார். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.