சசிகலா அதிமுகவில் இல்லை, அவர் பேசிவருவது அமமுகவினருடன் தான் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
அதிமுக தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியபிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்காத நிலையில் மாவட்ட செயலர்களுடன் ஆலோசித்தது குறித்து ஈபிஎஸ் விளக்கமளித்தார். அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசுவது போன்ற ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருவது குறித்து கேட்டபோது, ``சசிகலா அதிமுக கட்சியில் இல்லை நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலின்போது தான் அரசியலில் இருந்து விலகிவிட்டதாக ஊடகம் மற்றும் பத்திரிகைகளுக்கு அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். எனவே அந்த ஆடியோக்கள் குறித்து கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை; அவர் அமமுக தொண்டர்களுடன்தான் பேசிவருகிறார்`` என்று பதிலளித்தார்.
மேலும் ஓபிஎஸ் பங்குபெறாதது குறித்து கேட்டபோது, அவர் சென்னையில் புதுவீட்டுக்கு இடம்பெயர்ந்த காரணத்தால் அவரால் ஆலோசனையில் பங்கேற்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ``கொரோனாவை கட்டுப்படுத்த இன்னும் கூடுதல் கவனத்தை அரசு செலுத்தவேண்டும்; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளதால் பரிசோதனை மையத்தையும், முகாம்களையும் அதிகரிக்கவேண்டும். அதிமுக ஆட்சியில் 24 மணிநேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது`` என்றார்.