வன்னியருக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக முறையான தரவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காத காரணத்தினாலேயே ரத்து செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”கொரோனா பேரிடரில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு சொத்துவரி அதிகரிப்பு பெரும் சுமையை ஏறபடுத்தியுள்ளது. வன்னியருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக தரப்பில் நீதிமன்றத்தில் முறையாக வாதாடவில்லை என்றும் முறையான தரவுகளை நீதிமன்றத்தில் சமர்பிக்காத காரணத்தினாலேயே இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருக்க்கிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நில அபகரிப்புக்கு என தனிப்பிரிவு தொடங்கினார்.
திமுக ஆட்சிக்கு வந்த உடன் மீண்டும் நில அபகரிப்புகள் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து விட்டன. குறிப்பாக, கஞ்சா புழக்கத்தை தடுக்க டிஜிபி உத்தரவிட்ட போதிலும் பள்ளி கல்லூரி அருகிலேயே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு, பதிலளித்துள்ள திமுக பொருளாளர் துரைமுருகன், “வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை போகும் அளவிற்கு அவசரத்தில் அரைவேக்காட்டுத்தனமாக முடிவு எடுத்த - அ.தி.மு.க. ஆட்சிக்குத் தலைமை வகித்த இன்றைய எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி அரசு முறையான தரவுகளை நீதிமன்றத்தில் அளிக்கத் தவறியதால்தான் வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டது. திமுக மீது அபாண்டப் பழி சுமத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.