“மருந்து பெயரை மாற்றிக் கூறிவிட்டு இருப்பு உள்ளதாகக் கூறுகிறார் அமைச்சர் மா.சு” - இபிஎஸ் காட்டம்!

நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டநிலையில், இன்றும் கோஷங்களை எழுப்பியவர்கள் அவையிலிருந்து இரண்டாவது நாளாக வெளிநடப்பு செய்தனர்.
இபிஎஸ் - அப்பாவு
இபிஎஸ் - அப்பாவுபுதிய தலைமுறை
Published on

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் கலந்து கொண்ட அதிமுக உறுப்பினர்கள் 2 ஆவது நாளாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். மேலும், நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில், இன்றும் கோஷங்களை எழுப்பியவர்கள் அவையிலிருந்து இரண்டாவது நாளாக வெளிநடப்பு செய்தனர்.

அப்போது, 'நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது, பேச வேண்டிய நேரத்தில் அனுமதி தருகிறேன். கேள்வி நேரத்தை ஒத்திவைக்க முடியாது, கேள்வி நேரம் மக்களுக்கானது' என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

ஆனால், நீதி வேண்டும், நீதி வேண்டும் என்று முழக்கமிட்ட அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கையில், “ திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் இவர்கள் செய்யும் தவறுகளை தாங்கிப்பிடிக்கிறார்கள். கூட்டணி கட்சியாக இருந்தாலும், மக்களின் பிரச்னை என்று வரும்போது, கூட்டணி கட்சிகள் தங்களின் தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தை பொறுத்தமட்டில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். விஷ சாராய விவகாரத்தில் ஆட்சியரே தவறான தகவல் தருவதால் ஆணைய விசாரணை சரியாக இருக்காது. இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்னை என்பதால், மாநில அரசு விசாரித்தால் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரணை கோருகிறோம்; நீதியை நிலை நாட்ட, உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரணை அவசியமாகிறது.

மேலும், விஷ சாராய முறிவுக்கு மருந்தை நான் சொன்னேன்; மருத்துவத்துறை அமைச்சர் அல்சர் மருந்தை சொல்கிறார். ஹோமிபிசோல் மருந்தை நான் குறிப்பிட்டேன்; அமைச்சர் Omeprazole மருந்து பற்றி தெரிவித்துள்ளார்; மருந்து பெயரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாற்றிக் கூறிவிட்டு இருப்பு உள்ளதாகக் கூறுகிறார்.

மேலும், சுமார் 28 பேர் அபாய கட்டத்தில் இருப்பதாக நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கிறார். இந்த நிலைமையில், அரசாங்கத்தின் சார்பில் இது குறித்து தெளிவான விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதைதான் நாங்கள் கேட்டோம். ஆனால், சபாநாயகர் அனுமதி தருவது போல பேசி, அவருடைய கருத்தைபதிவு செய்துவிட்டார். இறுதியில் எங்களுக்கு அனுமதி மறுத்துவிட்டார்.

மேலும், காங்கிரஸ் கட்சி 25 ஆண்டுகால ஒப்பந்தத்தை ஆளும் கட்சியுடன் செய்து விட்டனர். ஆகவே, அவர்களை சொல்வதைதான் காங்கிரஸ் கட்சியினர் கேட்பார்கள். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட மக்கள் இவர்களுக்கென தேசிய கட்சிகள் கூட குரல் கொடுக்கவில்லை.” என்று தெரிவித்தார்.

இபிஎஸ் - அப்பாவு
அதிர்வலைகளை ஏற்படுத்திய விஷ சாராய மரணங்கள் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com