அதிமுகவின் ஒற்றைத் தலைவராக எடப்பாடி பழனிசாமி மாற வாய்ப்புள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதற்கு முன்னதாக 11 பேர் கொண்ட அதிமுகவின் வழிக்காட்டுதல் குழு உறுப்பினர்களை பழனிசாமி அறிவித்தார்.
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் புதியதலைமுறைக்கு அளித்தப் பேட்டியில் "50 நாட்களாக அதிமுகவில் நீடித்து வந்தக் குழப்பம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்க்கு அதிக ஆதரவு இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இப்போதுதான் ஓபிஎஸ் போராடி ஒரு வழிக்காட்டுதல் குழுவை அமைக்க முடிந்துள்ளது. இப்போதுள்ள அமைக்கப்பட்டுள்ள வழிக்காட்டுதல் குழுவில் முதல் 6 பேர் அமைச்சர்கள் அனைவரும் ஈபிஎஸ் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்"
"மீதமிருக்கும் 5 பேர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். இதிலிருந்து கட்சியின் பிடியும் ஆட்சியின் பிடியும் ஈபிஎஸ் கையில் இருப்பதாக நான் பார்க்கிறேன். இதனை ஓபிஎஸ் எப்படி பார்க்கிறார் என தெரியவில்லை. கட்சியின் ஒற்றுமைக்காக தான் இப்படியே இருக்க ஓபிஎஸ் விரும்பினால் அதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. இப்போதைக்கு கட்சியில் ஒற்றுமை இருக்கும். இதன் மூலம் அதிமுகவின் ஒற்றை தலைவராக ஈபிஎஸ் மாற வாய்ப்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்