அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொன்விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தெரிவித்திருக்கின்றனர்.
இன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொன்விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் கட்சி அமைப்புரீதியாக செயல்பட்டு வரக்கூடிய மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பேரூராட்சிக் கிளை அளவில் இந்தக் கொண்டாட்டங்கள் நடைபெறவேண்டும் என்றும், அரசு அறிவித்திருக்கிற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், தனிமனித இடைவெளிகளைப் பின்பற்றியும் பொன்விழாவை கொண்டாடவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுதவிர, புதிய அவை தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிமுக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.