சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக கட்சியின் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதில் துணை பொதுச் செயலாளர்கள் கே. பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிர்வாகிகளிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளரின் பணிகளை Promote செய்வது ஐ.டி விங் வேலை இல்லை என்றும், இளைஞர்கள் கையில் 40% வாக்கு உள்ளது, இளைஞர்கள் என்ன விரும்புகின்றனர் என்பதை புரிந்து அதற்கு ஏற்றவாறு பதிவு செய்யுமாறும் ஐடி விங் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
10 சதவிகித வாக்குகளை இழந்துள்ள நிலையில் அதனை மீட்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று, எடப்பாடி பழனிசாமி கூறியதாக அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச்செயலாளர் தெரிவித்தார்.
தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் மட்டுமே உள்ளது என்று கூறிய இபிஎஸ், மாநில தலைமை சொல்லக்கூடிய தகவல்கள் கடைசி வாக்கு முகவர்கள் வரை தகவல் செல்லும் வகையில் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார். 2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும் இபிஎஸ் நிர்வாகிகளுக்கு தெரிவித்தார்.
முன்னதாக அதிமுக கட்சி அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் வைக்கப்பட்ட எல்இடி திரையை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது அங்கிருந்த நிர்வாகி படம் எடுத்துகொண்டு இருந்தபோது அவரின் செல்ஃபோன் எடப்பாடி பழனிசாமி மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக கூட்டத்தால் அவ்வாறு நேரிட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.