“திரிஷா குறித்து அவதூறு பரப்பிய ஏ.வி ராஜு மீது நடவடிக்கை எடுக்கப்படும்” - எடப்பாடி பழனிசாமி காட்டம்!

நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுகவில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது அதில் எத்தனை கட்சிகள் வெளியேறும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிPT WEB
Published on

எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“நலத்த்திட்டங்களை நிறைவேற்றவில்லை முதல்வர்”

"தமிழக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் சரி, முதலமைச்சராக இருக்கும் போதும் சரி, மதுரை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என அறிவித்தார். ஆனால் ஒன்றைகூட நிறைவேற்றவில்லை.

மதுரைக்கு 600 கோடி ரூபாய் மதிப்பில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவித்தார். ஆனால் இரண்டு ஆண்டு காலம் ஆகிவிட்டது. இதுவரை அதற்கு உண்டான எந்த ஒரு பணிகளும் மேற்கொள்ளவில்லை.

“திமுக கூட்டணி பிரியும்”

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுகவில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதில் எத்தனை கட்சிகள் வெளியேறும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். திமுகவை பொருத்தவரை வாரிசு அரசியல், குடும்ப கட்சி கார்ப்பரேட் கம்பெனி என்பதுதான் பொருந்தும்.

பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்திதான் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்ற நிலை இங்கு இல்லை. இதற்கு முன்பு ஒரிசா, தெலுங்கானா, ஆந்திரா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தித் தேர்தலில் வெற்றி பெறவில்லை. அதிமுகவின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டால் நாங்கள் ஆதரிப்போம், இல்லையென்றால் யாராக இருந்தாலும் நிராகரிப்போம்.

திரிஷா குறித்து அதிமுக நிர்வாகியின் அவதூறு...

ஏ.வி ராஜு பெரிய ஆள் கிடையாது. அவர் பேசியதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஏதோ இரக்கப்பட்டு கட்சியில் சேர்த்தோம். அவர் ஏற்கனவே வேறு விதமான மனநிலையில் இருந்தார். அவர் உடல்நிலை சரியில்லாதவர் என்பதால், இரக்கப்பட்டோம். இப்போது கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதால் கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஏ.வி ராஜு
ஏ.வி ராஜு

மேகதாது வழக்கு-

மேகதாது பிரச்சினையில் நீதிமன்ற அவதூறு வழக்கு அதிமுக அரசு தொடர்ந்தது. தற்போது தில் இருந்தால் திமுக அரசு அவதூறு வழக்கு தொடர வேண்டும். திமுக ஆட்சியில் எந்த ஒரு நல்ல திட்டமும் தமிழ்நாட்டுக்கு வராது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com