காஞ்சிபுரத்தில் இயங்கும் அரிசி ஆலைகளில் இருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
காஞ்சிபுரம் நகர பகுதியை ஒட்டிய புத்தேரி, கீழம்பி, பிள்ளையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் சில இயங்குகின்றன. தொடர்ந்து இயங்கும் அரிசி ஆலைகளில் இருந்து நெல் ஊறல் தண்ணீர் (கழிவுநீர்) வெளியேற்றப்படுகிறது. இக்கழிவு நீரை சில ஆலைகள் சுத்திகரித்து முறைப்படி வெளியேற்றுகின்றனர். ஆனால் சில ஆலைகள், சுத்திகரிக்காமல் நள்ளிரவில் திறந்து விடுவதால், துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இந்தக் கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது. அதேபோல், ஆலைகளில் இருந்து வெளியேறும் சாம்பல் துகள்களும் குடியிருப்பு பகுதிகளில் தேங்குகிறது. அந்தப் பகுதிகள் பார்ப்பதற்க்கு மினி கூவம் போல காட்சி அளிக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி, காஞ்சிபுர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஆலையில் இருந்து வெளியேறும் சாம்பல், காற்றில் பரவுவதை தடுக்க போதுமான சாம்பல் வடிகட்டிகள் பொருத்தப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அரிசி அவியல் மற்றும் அரவை ஆலைகள் இயங்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும். இடையில் விதிமுறை மாற்றம் இருப்பின் அதையும் ஆலைகள் நிறைவேற்ற வேண்டும் என்பது போன்ற 35 நிபந்தனைகள் மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அரிசி ஆலைகள் இயக்க கட்டுபாடு விதித்து உள்ளது. இவை அனைத்தையும் பூர்த்தி செய்தால் மட்டுமே ஆலையை இயக்க அனுமதி கிடைக்கும். ஆனால் காஞ்சிபுரம் பகுதியில் பல அரிசி ஆலையில் இருந்தது நாள்தோறும் டன் கணக்கில் சாம்பல் வெளியேறுகிறது.
மேலும் 30க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் குடியிருப்பு பகுதியில் உள்ளன. இதனால் காற்று மண்டலம் மாசடைகிறது. அருகில் குடியிருப்போருக்கு சுவாச கோளாறுகள் தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. சாம்பல் துகள்கள் காற்றில் பரவி கண்களில் விழுவதால் வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கின்றனர். இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ஆலையிலிருந்து வெளியேறும் ஒட்டுமொத்த கழிவுநீரும் மழைநீர் செல்லும் கால்வாயில் சங்கமித்து, நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இப்பகுதி முழுவதும் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சாம்பல் துகள்கள் காற்றில் பரவுவதை தடுக்க வேண்டும் மற்றும் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளை அப்புறப்படுத்தி தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.