ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தீவிர கண்காணிப்புக்கு டிஜிபி ரவி உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு காலத்தில் குடும்பங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தினமும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 25 அழைப்புகள் வருவதாக டிஜிபி ரவி தெரிவித்துள்ளார். இதனையடுத்து அனைத்து மாவட்டத்திலும் 1091 என்ற உதவி எண் செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே அந்தந்த மாவட்டங்களில் பெண்களை தாக்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை தீவிரமாக கண்காணிக்கவும், பெண்கள் அதிகம் குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
வெளிமாநிலத்தில் இருந்து வந்து, கோயம்புத்தூர், திருப்பூர் ,சென்னை உள்ளிட்ட இடங்களில் வேலை பார்க்கும் பெண் தொழிலாளர்களுக்கு போதிய உணவு, இடம் உள்ளதா என்பதை ஆய்வு செய்து உதவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பெண்கள் தங்கும் விடுதி, மற்றும் தங்கிப் படிக்கும் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் பெண்களுக்கு உணவு மற்றும் உரிய பாதுகாப்பு உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் டிஜிபி ரவி உத்தரவிட்டுள்ளார்