உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்வதற்காக அதிகாலை 4.30 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். புத்தாண்டு தினத்தில் மீனாட்சியம்மனுக்கு பட்டுச்சேலை சாத்தி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறனர்.
முருகப்பெருமானின் 4ஆம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆங்கில வருட பிறப்பையொட்டி கோயிலில் தமிழ் வருடங்களை குறிக்கும் 60 படிகளில் பக்தர்கள் குத்து விளக்கு ஏற்றி வழிபாட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அதிகாலை முலதே பக்தர்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் நீண்ட வரிசையில் நின்று முழு முதற் கடவுளான விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று திருப்பூரில் உள்ள கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திருப்பூர் தாராபுரம் சாலையில் பிரசித்தி பெற்ற கோவிலான கோட்டை மாரியம்மன் கோவிலில் அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ரூபாய் நோட்டு அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம் 1600 ஆண்டுகள் பழமையான சிவ திருத்தலமாகும். புண்ணியத் தலமான விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி பால், தயிர், தேன், சந்தனம், 108 சங்குகளை கொண்டு உலக அமைதி வேண்டியும், சரியான பருவத்தில் மழை வேண்டியும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது பல மாவட்டத்திலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விருத்தகிரீஸ்வரரை தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயில் ஒன்றியம் மேலையூரை அடுத்த கஞ்சா நகரத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு நோய் தீர வேண்டியும், வேண்டிய காரியங்கள் வெற்றி பெற வேண்டியும் அந்தோனியார் ஆலயத்திற்கு அங்கப் பிரதட்சணம் செய்தும் முட்டி போட்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி நடந்தும், தீச்சட்டி ஏந்தியும் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஆங்கில புத்தாண்டை ஒட்டி பழமையான பாகம்பியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோ பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்து வருகின்றனர்.