தமிழகத்தின் நகரங்கள் உட்பட பல இடங்களின் ஆங்கிலப்பெயர்களை தமிழுக்கே மாற்ற, தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்களின் ஆங்கிலப் பெயர்களையும் தமிழில் மாற்ற முடிவுசெய்துள்ளதாக நேற்று சட்டப்பேரவையில் பேசிய தமிழ் வளர்ச்சி, பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார். இதுதொடர்பாக கூறிய பாண்டியராஜன், நகரங்களின் ஆங்கிலப் பெயர்களை தமிழில் மாற்றம் செய்ய தமிழ் வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையை சேர்ந்த மூன்று பேர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்தக்குழு 3 மாதத்திற்குள் தங்கள் அறிக்கையை சமர்பிக்கும் என்றும் கூறினார். அந்த அறிக்கை பின்னர் முதலமைச்சருக்கு அனுப்பட்டு, அதன்படி பெயர் மாற்றங்கள் செய்யப்படும் என்றார்.
அதன்படி மாற்றம் செய்யப்பட்டால், (Tuticorin என்பது Thoothukudi) என்றும், (Egmore என்பது Ezhumbur) என்றும், (Triplicane என்பது திருவல்லிக்கேணி) என்றும் ஆகும். இதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆங்கிலப்பெயர்கள் தமிழ் பெயர்களாக மாற்றப்படும். இதற்கெனத் தொடராச் செலவினமாக ரூ.5 லட்சம் ஓதுக்கீடு செய்யப்படவுள்ளது.