இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தது சற்றே ஆறுதலாக இருந்தது. ஆனால், லாட்ஸ் போட்டியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. கோலி உட்பட அனைத்து வீரர்களும் சொதப்பினார்கள். முதல் இன்னிங்சில் 107, 2வது இன்னிங்சில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இரண்டு இன்னிங்சில் அஸ்வின்தான்(29, 33) அதிக ஸ்கோர் அடித்தார். இதனால், இந்திய வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இந்திய அணிக்கு ஆதரவாக இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவொர் பேலிஸ் குரல் கொடுத்துள்ளார். பேலிஸ் கூறுகையில், “இது எளிமையான உண்மை. ஆஸ்திரேலியா, இந்தியா இங்கிலாந்து போன்ற நாடுகள் அதிக அளவில் கிரிக்கெட் விளையாடுகின்றன. நேரடியான போட்டிகளை காட்டிலும் பயிற்சி ஆட்டங்களை ஒவ்வொருவரும் விரும்புவார்கள். உடனடியாக ஒரு நாட்டில் சூழ்நிலையில் பொருந்திவிட முடியாது. இன்னும் நிறைய பயிற்சி ஆட்டங்கள் இருந்திருக்க வேண்டும்.
பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும் போது நிச்சயம் அவர்களுக்கு அதனை எதிர்கொள்வதில் சிக்கல் இருக்கும். எந்த ஒரு அணியும் தனக்கு பழக்கப்படாத மைதானத்தின் தன்மையையும், பந்துவீச்சையும் எதிர்கொள்ளும் போது அந்த அணி திணறுவது இயல்புதான்” என்றார்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒரே ஒரு பயிற்சி ஆட்டம் மட்டுமே ஆடப்பட்டது. அதுவும் 4 நாட்களுக்கு திட்டமிடப்பட்டு பின்னர் 3 நாட்களாக குறைக்கப்பட்டது.