தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு கல்வி இயக்ககம் மூலம் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் கலந்தாய்வுக்கு 1,878,47 மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் தகுதியான 1,78,959 மாணவ மாணவிகளுக்கு தரவரிசை பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டது.
இதையடுத்து இன்று சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.
அதன்படி “ஜூலை 22ஆம் தேதி முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், ஜூலை 28ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 3 ஆம் தேதி வரை பொது கலந்தாய்வும் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு பொது கலந்தாய்வு மூன்று கட்டங்களாக மட்டும் நடைபெறும்.
துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அருந்ததியர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறும்.
செப்டம்பர் 11ம் தேதியுடன் கலந்தாய்வு பணிகள் முடிக்கப்படும்” என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று அறிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு வீணாகாமல் அனைத்து இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும். பொறியியல் இடங்களை தேர்வு செய்துவிட்டு வேறு படிப்புக்கு மாறும் மாணவர்களின் இடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் மாணவர்கள் படிப்பில் சேர்ந்து விட்டு வேறு கல்லூரிக்கு மாறும் பொழுது மாணவர்கள் கட்டிய பணத்தை முழுமையாக திரும்ப கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக பொது கலந்தாய்வு நான்கு கட்டங்களாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் 15க்கு முன்பாக அனைத்து பொறியியல் கலந்தாய்வு நடவடிக்கைகளும் முடிக்கப்பட உள்ளது. அதனால் இந்த ஆண்டு பொது கலந்தாய்வு மூன்று கட்டங்களாக மட்டும் நடத்தப்படும். அரசு பள்ளியில் படித்த மாணவருக்கான 7.5 சதவீதம் சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 11,804 இடங்கள் நிரப்பப்பட உள்ளன” என்றார். தொடர்ந்து அவர் பேசியவற்றின் முழு தகவலை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.