பொறியியல் படிப்பின் மீதுள்ள ஆர்வக் குறைவு காரணத்தால் மாணவர் சேர்க்கைக்கு கல்லூரி பேராசிரியர்களை நிர்பந்திக்கும் நிலைக்கு கல்லூரி நிர்வாகம் ஆளாகியுள்ளது.
சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் கல்லூரி பேராசிரியர்களை நிர்பந்திற்குள்ளாக்கி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தான் பணுபுரியும் கல்லூரியில் ஒரு பேராசிரியர் 3 முதல் 10 மாணவர்கள் வரை சேர்க்க சொல்லி கல்லூரி நிர்வாகம் அழுத்தம் தருகிறது, இதனால் பேராசிரியர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும் சூழலி உருவாகியுள்ளது. இதுபோன்ற செயல்பாடுகளால், பொறியியல் கல்வியின் தரம் கேள்விக்குறியாகும் என கல்வி ஆலோசகர்களும் கல்வியாளர்களும் கூறிகின்றனர்.
2015ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையில் பொறியியல் கல்லூரிகள் சரிவை சந்திக்கத் தொடங்கின. உள்கட்டமைப்பு வசதிகளோடு நல்ல தேர்வு முடிவுகளை காண்பிக்கும் முன்னணிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை என்பது குறிப்பிடும்படியான அளவில் உள்ளது. ஆனால் 2 ஆம், 3ஆம் நிலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக மாணவர் சேர்க்கை பணியை தங்களது கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் மீது திணித்து வருகின்றன. இதனால் பல 3ஆம் நிலை பொறியியல் கல்லூரிகளில் 100க்கும் குறைவான அளவிலே மாணவர் சேர்க்கை, கடந்த ஆண்டுகளில் இருந்தது.
இது குறித்து தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றியவர் ஒருவர் கூறுகையில் “ஒரு பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்ற வேண்டுமென்றால் எந்த திறனும் தேவையில்லை, அக்கல்லூரியில் சேர்த்துவிட 3 மாணவர்கள் கைவசம் இருந்தால் போதும் என்கின்றார். சில தனியார் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களை சேர்க்க முதலில் அணுகுவது அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களைதான் என்கிறார் மற்றொருவர். பல தனியார் பொறியியல் கல்லூரியில் அரசிடமிருந்து அதிக உதவித்தொகை பெற, குறிப்பிட்ட சமூதாயத்தை சேர்ந்த சில தகுதியுள்ள மாணவர்களை சேர்ப்பதில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் பாதியில் தங்களது படிப்பை நிறுத்தினாலும் அவர்களது சான்றிதழ்கள் வழங்கப்படுவதில்லை, மாறாக அவர்களது பெயரில் வரும் உதவித்தொகையை கல்லூரிகளே எடுத்துக்கொள்ளும் அவல நிலையும் தொடர்வதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் சிலர் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் அவர்களது மாணவர்களின் தொடர்பு என்ணை வாங்கி, அதன்மூலமாக மாணவர்களை மூளைச்சலவை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை செய்ய சில பொறியியல் கல்லூரியில் இளம் பேராசிரியர்களை குறிப்பாக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு BPO நிறுவனங்கள் போன்று எத்தனை கால்கள் பேச வேண்டும் என்ற டார்கெட்டும் உள்ளது என சிலர் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு வசதிகள் இருப்பதாக கூறி, விவரம் அறியாத மாணவர்களை ஏமாற்றி சேர்க்கும் சில தனியார் பொறியியல் கல்லூரிகள்,ஆய்வுக்கு வரும் ஏ.ஐ.சி.டி.இ, அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளையும் ஏமாற்றுவதாகக் கூறுப்படுகிறது. சில தனியார் பொறியியல் கல்லூரிகளின் இதுபோன்ற செயல்பாடுகளால் தான் பொறியியல் படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தோடு பொறியியல் கல்வியின் தரமும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது என்கின்றனர் கல்வியாளர்கள்.