ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
முன்னதாக ஆன்லைன் ரம்மி குறித்து ஆராய்ந்து இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி குழு அமைத்து உத்தரவிட்டிருந்தது.
தொடர்புடைய செய்தி: ஆன்லைன் ரம்மி குறித்து 2 வாரங்களுக்குள் அறிக்கை - ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு
அந்த அறிக்கை, இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான அவசர சட்டம் விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
தமிழக அரசு அமைத்த ஆய்வுக்குழுவினர், `ஆன்லைன் விளையாட்டுகள் உண்மையிலேயே திறன்களை வளர்க்கிறதா, ஆன்லைன் விளையாட்டு தொடர்பான விளம்பரங்களை தடை செய்வது எவ்வாறு, ஆன்லைன் விளையாட்டுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் - நிதி இழப்புகள் எவ்வளவு, இணையவழி பணபரிவர்த்தனை எந்த அளவுக்கு கட்டுப்படுத்த வேண்டும், ஆன்லைன் விளையாட்டு தடை செய்வது தொடர்பான சட்ட மசோதாவை உருவாக்குவதற்கான காரணங்கள் என்னென்ன’ என்பவை குறித்து ஆராய்ந்துள்ளனர். அதன் முடிவுகளை முதல்வரிடம் அறிக்கையாக தற்போது கொடுத்துள்ளனர். இந்த குழுவிற்கு தேவையான வசதிகளை டிஜிபி மற்றும் சென்னையில் உள்ள உயர் அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளார்கள்.
அரசுத் தரப்பில், ஆன்லைன் ரம்மி தொடர்பாக நீதிபதி சந்துரு குழு பரிந்துரை அறிக்கை பற்றி அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.