ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொல்லப்பட்ட வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தவிர 9 பேரும் சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
சரவணபவன் உணவகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதி. இவர், பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால் மேன்மையை அடையலாம் என ராஜகோபாலிடம் ஜோதிடர்கள் கூறியுள்ளனர். ஏற்கெனவே 2 மனைவிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் பேச்சைக் கேட்டு ஜீவஜோதியை 3-ஆவதாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார் ராஜகோபால். இதனிடையே பிரின்ஸ் சாந்தகுமார் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
பிரின்ஸ் சாந்தகுமார் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டதை அடுத்து 2004-ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 55 லட்சம் ரூபாய் அபராதமும், எஞ்சிய 8 பேருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம். அதை எதிர்த்து ராஜகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அதிர்ச்சி அளித்தது.
ஜாமீனில் வெளிவந்த ராஜகோபால் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 10 ஆண்டுகள் விசாரணைக்குப்பின் உயர்நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். அத்துடன் ஜூலை 7ஆம் தேதிக்குள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ராஜகோபால் சரணடைந்து சிறை செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், ராஜகோபாலுக்கு உடல்நிலை சரியில்லை என்பதாலும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனப்பட்டது.
இந்நிலையில், சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தவிர 9 பேரும் சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.