நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் கும்கி யானைகள் உட்பட மொத்தம் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் கும்கி யானைகள், பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் முகாமில் உள்ள சில மூத்த கும்கி யானைகள் வயது முதிர்வு காரணமாக இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ஓய்வு பெற இருக்கின்றன.
இதை கருத்தில்கொண்டு, அடுத்த தலைமுறை கும்கி யானைகளை தயார் செய்யும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி முகாமில் பராமரிக்கப்படும் இளம் வயது ஆண் யானைகள் மற்றும் குட்டி யானைகளுக்கு கும்கி யானைகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் உதயன், கிருஷ்ணா, கிரி, சங்கர், ரகு ஆகிய யானைகள் பங்கேற்றுள்ளன.
இந்த பயிற்சியின்போது காட்டு யானைகளை கயிறு கட்டி பிடிப்பது, காட்டு யானை தப்பாமல் இருக்க சங்கிலி மற்றும் கயிறுகளை மிதிப்பது, பிடிக்கப்படும் காட்டு யானையை லாரியில் ஏற்றுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அவற்றுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. தினமும் காலை 8 மணியிலிருந்து சுமார் ஒருமணி நேரத்திற்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஏற்கெனவே பயிற்சி பெற்ற கும்கி யானைகளுக்கும், இந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. முகாமிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கும்கி யானைகள் பயிற்சி பெறுவதை கண்டு ரசித்து செல்கின்றனர்.