மின்சாரக்கட்டணம் அதிகரிப்பு குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுங் கட்சியின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று பேஸ் புக் நேரலையில் பேசினார். அதில் அவர் பேசும் போது “ கொரோனா ஒரு பக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது என்றால் முதல்வர் எடப்பாடி ஒரு பக்கம் வாட்டி வதைக்கிறார். மக்கள் கொரோனாவைக் கண்டு அதிர்ச்சியடைந்தது போலவே மின் கட்டணத்தைக் கண்டும் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாட்டோட நிலைமை முதல்வருக்கு அமைச்சருக்கும் சரிவரத் தெரியவில்லை. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வாழ்வாதாரம் இழந்து பாதிப்படைந்தவர்களுக்கு நான் மாதம் 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் அதனை அவர்கள் கேட்க வில்லை.
குறிப்பாக மின்கட்டணம். இதில் ஆரம்பத்தில் இருந்தே அதிகமான குளறுபடிகள் இருந்தன. சிலருடைய மின் கட்டண அட்டையில் மிக அதிகமானத் தொகை இருந்தது. இது குறித்து பலரும் தங்களின் குற்றசாட்டுகளை முன்வைத்தனர். இதற்கு பழனிச்சாமியின் ஆட்சிதான் காரணம். ஆரம்பத்தில் இருந்தே கொரோனாவை சரிவர கையாளாத எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி, முன்னுக்குப் பின்னான உத்தரவுகளை விதித்தது.
அதன் பின்னர் ஏற்பட்ட விளைவுகளுக்கு, அவர்கள் மக்களை குற்றம் சாட்டினர். இந்தக் கட்டணம் அநியாயமானக் கட்டணம். இந்த மாதிரியான நெருக்கடியான காலக்கட்டத்தில்தான் அரசு தங்களால் முடிந்த சலுகைகளை மக்களுக்குச் செய்ய வேண்டும். ஆனால் இங்கு மின்கட்டணம் அதிகமாகச் வசூலிக்கப்படுகிறது. கேரளா மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்கள் மக்களுக்கு மின்கட்டணச் சலுகைகளை வழங்கியுள்ளது. ஆனால் தமிழக அரசால் அதைச் செய்ய இயலவில்லை. இதற்கான காரணம் நிதி நிலைமை என்றால் அது குறித்து தெளிவான விவரங்கள் வெளியிடப்பட வேண்டும்” என்றார்.