உயிரை துச்சமென நினைத்து பேரிடர் காலங்களில் அரசு மின்வாரிய ஊழியர்களுடன் கைகோர்த்து உழைக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு கைகொடுக்க வேண்டுமென அந்த ஊழியர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை, பெருவெள்ளம், புயல் என பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஒவ்வொரு பேரிடர் இன்னல்களிலும் வருவாய்துறை மின் வாரியம் உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டு, அந்தத் துறை ஊழியர்கள் இரவு - பகல் பாராமல் பம்பரமாய் சுழன்று பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் பம்பரமாய் பணியாற்றுவதில் முக்கிய பங்காற்றுவது மின் வாரிய ஊழியர்கள்தான். கடந்த 15-நாட்களாக வடகிழக்கு பருவமழை பொழிந்து வருகிறது. அதிலும் குறிப்பாக குமரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.
3 நாட்கள் கொட்டி தீர்த்த கனமழையில் ஆறு குளங்கள் உடைத்ததோடு குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்கள் என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து குமரியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதோடு பல்வேறு மின் கம்பங்கள் மின் மாற்றிகளும் சேதமடைந்தது. உடன் துணை மின் நிலையங்களுக்கு செல்லும் உயர் மின்னழுத்த கோபுரங்களும் சேதமடைந்தது. இதனால் பல மாவட்டங்களில் பல்வேறு வீடுகளுக்கு மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது.
இதனால் அவற்றை உடனடியாக சரி செய்ய அரசு உத்தரவிட்டதின் பேரில் மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மற்றும் தனியார் ஒப்பந்த ஊழியர்களுடன் கைகோர்ந்து களமிறங்கினர். பெருமழை வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் தன்னுயிரையும் துச்சமென மதித்து இரவு பகல் பாராமல் பணியாற்றி இருளில் இருந்த கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கி மின்துறை அதிகாரிகள் வீடுகளுக்கு விளக்கேற்றி வருகின்றனர்.
இந்த மின் பணியாளர்களுடன் தனியார் மின் பணி ஒப்பந்த ஊழியர்கள் (Contract labourers) இரவு பகலாக பணியாற்றியிருந்தது, இங்கே நாம் கவனிக்கத்தக்கது. ஆனால் ஒப்பந்த மின்வாரிய ஊழியர்களுக்கு, பிற ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த ஊழியர்கள் தங்களையும் பணி நிரந்தரம் செய்து தங்கள் வாழ்க்கைக்கும் ஒளியேற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் வாழ்க்கை இருளில் இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.