தேர்தல் முடிவுகள் ஹைலைட்ஸ்: 2 பொதுத்தொகுதிகளிலும் வெற்றி - புதிய பரிமாணத்தை காட்டிய விசிக!

தேர்தல் முடிவுகள் ஹைலைட்ஸ்: 2 பொதுத்தொகுதிகளிலும் வெற்றி - புதிய பரிமாணத்தை காட்டிய விசிக!
தேர்தல் முடிவுகள் ஹைலைட்ஸ்: 2 பொதுத்தொகுதிகளிலும் வெற்றி - புதிய பரிமாணத்தை காட்டிய விசிக!
Published on

தமிழகத்தில் இரண்டு பொதுத்தொகுதிகளில் வெற்றியை வசப்படுத்தியிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

திமுக கூட்டணியில் 6 தொகுதிகளே ஒதுக்கப்பட்டபோதும், அதிக இடங்களை எதிர்பார்ப்பதை விட சனாதன சக்திகளுக்கு எதிரான வெற்றிக் கூட்டணியில் இடம்பெறுவதே முக்கியம் என தொண்டர்களுக்கு விளக்கம் கொடுத்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

திமுக கூட்டணியில் செய்யூர், காட்டுமன்னார்கோவில், வானூர், அரக்கோணம் ஆகிய நான்கு தனித் தொகுதிகளும், நாகை, திருப்போரூர் ஆகிய இரு பொதுத் தொகுதிகளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

தனித்துவம் கருதி தனிச்சின்னத்தில் போட்டியிடுவதென முடிவெடுத்து, ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளிலும் பானைச் சின்னத்தில் களமிறங்கியது விடுதலைச் சிறுத்தைகள். இதில் வானூர் தனித் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வன்னி அரசு, அதிமுக வேட்பாளர் சக்ரபாணியிடமும், அரக்கோணம் தனித் தொகுதியில் போட்டியிட்ட கௌதம சன்னா, அதிமுக வேட்பாளர் ரவியிடமும் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.

காட்டுமன்னார்கோவில் தனித் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ-வான முருகுமாறனை எதிர்த்து போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிந்தனை செல்வன், சுமார் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். செய்யூர் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் எம்.பாபு, அதிமுக வேட்பாளர் கனிதாவை 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

திருப்போரூர் பொதுத்தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் எஸ்.எஸ் பாலாஜி, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆறுமுகத்தை எதிர்த்து போட்டியிட்டார். கடும் போட்டி நிலவிய இந்தத் தொகுதியில் சுமார் 5,500 வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்.எஸ்.பாலாஜி வெற்றியை வசமாக்கினார்.

இதேபோல் நாகை தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆளுர் ஷாநவாஸ், அதிமுக வேட்பாளர் தங்க கதிரவனை தோற்கடித்தார். சுமார் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் நாகை தொகுதியை கைப்பற்றினார் ஷாநவாஸ். இவ்விரு பொதுத் தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் தனித் தொகுதிகளுக்காக கட்சி என்ற எல்லையை கடந்து புதிய பரிமாணத்தை காட்டியிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com