செய்தியாளர்: பிரேம்குமார்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது அய்யனார்குளம் கிராமம். இந்த கிராமத்தின் வளர்ச்சிக்காக கிராம மக்கள் நன்கொடையாக அளித்த பணத்தை, ஊர் மந்தை சாவடியில் உள்ள இரும்புப் பெட்டியில் வைத்துள்ளனர். இதில், சுமார் 40 லட்சம் பணம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பெட்டிக்கான சாவிகளை கிராமத்தில் உள்ள நான்கு முக்கிய நிர்வாகிகள் பத்திரமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் கிராம வளர்ச்சி மற்றும் கோவில் திருவிழாகளுக்கு தேவைப்படும் நிதியை, பெட்டியில் இருந்து எடுத்து ஊர்க்காரர்கள் செலவு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கிராம மக்கள் பாதுகாத்து வரும் இந்த பணத்தை வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது கிராமத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்க அரசியல் கட்சியினர் முயல்வதாகவும், எப்போது வேண்டுமானாலும் திருடு போகலாம் என்றும் காவல்துறைக்கு போன் மூலம் மர்ம நபர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து நேரில் ஆய்வு செய்த உசிலம்பட்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் பாதுகாப்பு இல்லாமல் உள்ள பணப் பெட்டிக்கு சீல் வைத்து எடுத்துச் செல்ல முற்பட்டனர்.
இதனால் கிராம மக்கள், தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தேர்தல் அதிகாரிகள், கிராம மக்கள் முன்னிலையில் பெட்டிக்கு சீல் வைத்தனர். இந்நிலையில், பணப்பெட்டியை 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.