மின்னணு இயந்திரங்களில் வாக்குகள் முழுவதும் எண்ணப்பட்ட பிறகே, விவிபேட் பதிவுச் சீட்டுகள் எண்ணப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் இதைத் தெரிவித்துள்ளார். தபால் வாக்குகள் மற்றும் மின்னணு இயந்திர வாக்குகள் அனைத்துச் சுற்றுகளும் முதலில் எண்ணி முடிக்கப்படும் என்று கூறியுள்ள அவர், அதன்பிறகே ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு தோராயமாக 5 விவிபேட் இயந்திரங்கள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தபால் மற்றும் மின்னணு இயந்திர வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், 5 விவிபேட் பதிவுச் சீட்டுகள் எண்ணப்பட்டு, அவற்றுக்குரிய மின்னணு இயந்திரத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும் என்றும் சத்ய பிரதா சாஷு கூறியுள்ளார். அதன்பிறகே தொகுதியின் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.