வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணி நிறைவடையாததால் மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற அவகாசத்தை நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.
ஏப்ரல் 24-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிடுமாறு, மாற்றம் இந்தியா அமைப்பின் நாராயணன் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்துமாறு உத்தரவிட்டது. மே 14-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது என தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், ஏன் நடத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கான பதில் மனுவை மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தனி செயலாளர் ராஜேந்திரன் தாக்கல் செய்தார். இதில் வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணி நிறைவடையாததால் தேர்தல் நடத்த கொடுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் அந்த பதில் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.