‘அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி’ - தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!
அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் விசாரணையானது நடைபெற்று வரும் சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் அதிமுக தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அதிமுக அனுப்பிய கடிதத்தில், ‘அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி’ என குறிப்பிடப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அந்த கடிதத்தில், பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற போது அதில் எடுக்கப்பட்ட முடிவுகள், அதில் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள், எதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டன, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன என்கிற விவரங்களை எல்லாம் இபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் அளித்திருந்தது. இதே விவரங்கள் நீதிமன்றங்களிலும் அளிக்கப்பட்டு இருந்தன.
அதனடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்தது. இந்தவழக்கு டெல்லி உயர்நீதிமன்றமத்திலும் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக பொதுச்செயலாளர் என தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.