தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 5 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் அலுவலர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், 5 காவல் நிலையங்களில் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அதில், தேர்தல் விதிகளை மீறவில்லை எனவும், வழக்கின் இறுதி அறிக்கை தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதால் தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜகண்ணப்பன் தரப்பில் வழக்கறிஞர்கள் வைரமணி மற்றும் ராமசாமி ஆகியோரும், காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் சந்தோஷூம் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ராஜ கண்ணப்பனுக்கு எதிராக நடைபெறும் வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.