திண்டுக்கல் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்கள் சிலர் வடை சுட்டும், காலில் விழுந்தும் நூதன முறையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 04.02.22 வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இதனையடுத்து தற்போது தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 18வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முஹம்மது சித்திக் தனது வார்டுக்கு உட்பட்ட ரவுண்டு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது டீக்கடையில் போண்டா சுட்டு வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து வாக்குகள் சேகரித்தார் அவர்.
இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து வாக்குகள் சேகரித்தார். இதேபோல் 3வது வார்டில் முதல் முறையாக போட்டியிடும் திருமதி இந்திராணி RM காலனி பகுதியில் உள்ள வாக்காளர்களை நேரில் சந்தித்து துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து காலில் விழுந்து பொதுமக்களுக்கு பொன்னாடை போர்த்தி வாக்குகள் சேகரித்தார். இவர் திமுக சார்பில் மேயர் வேட்பாளராகவும் களம் காண போட்டியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.