நாட்டுப்புற மற்றும் மேடைக் கலைஞர்களுக்கு, கொரோனா காலம் புரட்டிப்போட்ட வாழ்க்கையை அரசியல் கட்சிகளின் பிரசார பயணங்கள் மீட்டுத்தரத்தொடங்கியுள்ளன.
மேடையில் எம்ஜிஆர் வேடக் கலைஞரின் ஆட்டம் களைகட்டுகிறது. இன்னொரு பக்கம் நாட்டுப்புறக் கலைஞர்களின் பாட்டும், கலைகளுமாக உற்சாகம் கொப்பளிக்கிறது. கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், மக்களின் கவனத்தை ஈர்க்கவும், நாட்டுப்புற, மற்றும் மேடைக் கலைஞர்களை களமிறக்குகின்றன கட்சிகள். கொரோனா பொதுமுடக்கத்தால் முடங்கிப்போயிருந்தவர்களை தேர்தல் பிரசாரங்கள் உற்சாகமடைய வைத்திருப்பதாக கூறுகிறார்கள் கலைஞர்கள்.
கொரோனோ முடக்கத்தால் கடந்த ஆண்டு கோயில் விழாக்களுக்கான கட்டுப்பாடுகள், இவற்றை நம்பியுள்ள கலைஞர்களை பட்டினி போட்டநிலையில், தற்போது கிடைக்கும் வாய்ப்புகள் இவர்களுக்கு நம்பிக்கையை விதைத்துள்ளன.
எம்ஜிஆர் போன்ற தலைவர் வேடங்கள் மட்டுமின்றி, பலவித வேடங்களை தரித்து நடனமாடுவது, கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கொம்பூதும் கலைஞர்கள் என ஒவ்வொரு கலைஞர்களும் தேர்தல் திருவிழாவுக்கு உற்சாகமளித்து வருகிறார்கள். அனைத்து கட்சிகளும் தரும் ஆதரவுதான் இந்த கலைஞர்கள் கடந்த ஓராண்டாக பட்ட துயரங்களுக்கு மருந்திடும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.