சாலை விபத்தில் மகள் உயிரிழந்ததையடுத்து ஆதரவின்றி சாலையில் வீசப்பட்ட மூதாட்டியை மீட்டு முகாமில் சேர்த்த தன்னார்வலர்களுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவரது வயது 70 இவரும். இவருடைய மகளுடன் அதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்துள்ளார்,இந்நிலையில் மகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில் வீட்டின் முக்கிய ஆதாரமாக விளங்கிய மகளின் இறப்புக்குப் பின்பு வறுமையில் வாடிய வள்ளியம்மாள் பார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள சாலையோரங்களில் மாதக்கணக்கில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் மதுரையில் தொடர் மழையின் காரணமாகத் தங்குவதற்கு இடமில்லாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிய நிலையில் அதன் வழியாகச் சென்ற சமூக ஆர்வலர்கள் சிலர் மதுரை சோசியல் வெல்பர் டிரஸ்ட் நண்பர்களுக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அவர்கள் மூதாட்டியை மீட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்று, அவருக்குத் தேவையான நிவாரண பொருட்களைப் பெற உதவியாக உடன் இருந்தனர். மேலும் மூதாட்டிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு தனியார் முகாமில் சேர்க்கப்பட்டுள்ளனர். மகளின் இறப்பிற்குப் பின்பு சாலையோரம் வீசப்பட்ட மூதாட்டியைத் தன்னலம் பாராமல் மீட்டு முகாமில் சேர்த்த தொண்டு நிறுவனத்தின் தன்னார்வலர்களுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.