அம்பத்தூர் அருகே தம்பி இறந்த துக்கம் தாங்காமல், அதே நாளில் அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் அருகே கொரட்டூர் எல்லையம்மன் நகர் 2வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவருக்கு சேட்டு(50), சுரேஷ்(43) என இரு மகன்கள் உள்ளனர். இதில் சுரேஷுக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும், திருமுருகன், காந்தி ராஜன் என 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் கொரட்டூர் ரயில்வே பாலத்தின் அருகே காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சுரேஷ் குடிப்பழக்கதிற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வருடமாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்திருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அதிகமான வயிற்று வலியால் சுரேஷ் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாதபோது புடவையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மருத்துவமனைக்கு சென்று திரும்பிய சுரேஷின் மகன் காந்திராஜன் தந்தை தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து உடனடியாக கொரட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுரேஷின் அண்ணன் சேட்டு(50) என்பவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவரும் தள்ளுவண்டியில் வைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். தனது தம்பி சுரேஷ் இறந்த துக்கம் தாங்காமல் சேட்டு மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். அவரது நண்பர்களிடமும் இதுகுறித்து புலம்பியுள்ளார். இந்நிலையில் சேட்டு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அவர் வீட்டின் முன் அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து அவரது மகன் ஜோதிகுமார் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். இதனால் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அதே நாளில் அண்ணனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொரட்டூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.