பல்வேறு குற்ற வழக்குகளில் திறமையாக துப்பறிந்த மோப்பநாய் ரேம்போ உடல்நலக் குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
திருவள்ளூர் மாவட்ட காவல் துறையில் பல்வேறு வழக்குகளில் திறமையாக துப்பறிந்த மோப்ப நாய் ரேம்போ உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. இந்நிலையில், உடல் நல்லடக்கம் செய்யும் இடத்தில் நினைவு கூறும் வகையில் பலகை நடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட காவல் துறையில் துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிவில் பிறந்து 57 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் கடந்த 2009-இல் ரேம்போ பணியில் சேர்க்கப்டடது.
இந்நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக சுமார் 257 குற்ற சம்பவங்களில் குற்ற புலனாய்வுக்கு பயன்படுத்தப்பட்டு மோப்பநாய் ரேம்போ சேவை புரிந்தது. இந்த நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மோப்ப நாய் ரேம்போவிற்கு பணி ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால், ஓய்வுக்குப் பிறகும் திருவள்ளூர் மாவட்ட துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிவில் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே ரேம்போ உடல்நலக் குறைவாலும், வயது மூப்பு காரணமாகவும் உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து திருவள்ளூர் அரசு கால்நடை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மோப்பநாய் படைப்பிரிவின் அருகே உள்ள மைதானத்தில் திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். பிறகு ரேம்போவின் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.