5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - கடந்து வந்த மன உளைச்சல்களும், கல்வியாளர்களின் கருத்துக்களும்...!

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - கடந்து வந்த மன உளைச்சல்களும், கல்வியாளர்களின் கருத்துக்களும்...!
5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - கடந்து வந்த மன உளைச்சல்களும், கல்வியாளர்களின் கருத்துக்களும்...!
Published on

5-வது மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2020-2021 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு தரப்பு விமர்சனங்களும் எழுந்தன. இருந்தாலும் தமிழக பள்ளிக்கல்வித் துறை தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்து வந்தது.

தொடர்ந்து, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான பொதுத் தேர்வு அட்டவணையையும் தமிழக அரசு வெளியிட்டது. தமிழகத்தில் இதுவரை 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு இருந்துவந்த நிலையில், 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் மன உளைச்சலை உண்டாக்கியது என்றால் அது மிகையல்ல. தங்களது குழந்தைகளை சிலர் மனநல மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லும் நிலைக்கே சென்றுவிட்டார்கள்.

5 ஆம் வகுப்பு மாணவர்களிடம் ‘பப்ளிக் எக்ஸாமுக்கு தயாராகிட்டியா’ என்று கேட்டால் அப்படினா என்ன? என்று கேட்கும் சூழல் தான் இங்கு நிலவி வருகிறது. இந்த நேரத்தில் அவர்களை வேறு இடத்திற்கு சென்று தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்றால் அவர்கள் என்ன செய்வார்கள். ஒரு மாணவி கூறுகையில், தேர்வு அட்டவணையை பார்த்ததுமே நன்றாக படிக்கும் எனக்கே பயம் வந்துவிட்டது. தேர்வு எப்படி இருக்குமோ என்ற எண்ணங்களும், தேர்வில் தோல்வியடைந்தால் மீண்டும் 8 வகுப்புதான் என்ற ஆசிரியையின் பேச்சுகளும் கதிகலங்க வைப்பதாக தெரிவிக்கிறார். இதுபோக பெற்றோருக்கு பயம் வந்துவிட்டால் மார்க்குக்காக அவர்கள் குழந்தைகளை என்ன பாடு படுத்துவார்கள் என்றெல்லாம் கல்வியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசை பொறுத்தவரை 8 ஆம் வகுப்புவரை இடைநிற்றல் என்பது முழுமையாக குறைந்துவிட்டது. இந்த சமயத்தில் இந்த பொதுத்தேர்வு என்பது மாணவர்கள் இடைநிற்றலுக்கு காரணமாக வழிவகுக்கும் எனவும் இதனால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். நேற்றுக்கூட அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ளவே இந்த நடவடிக்கை என உறுதியாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 5வது மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கை வெளியிட்டுள்ளார். பல்வேறு தரப்பிலிருந்தும் பெறப்பட்ட கருத்துக்களை பரிசீலித்து, அரசாணையை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது எனவும் ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என அவர் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில், கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறுகையில், “தமிழக அரசின் இந்த முடிவு நிச்சயமாக வரவேற்கத்தக்கது. அதற்கு பாராட்டுக்கள். தமிழ் சமுதாயம் மேம்பட இது வழிவகுக்கும். இந்த பொதுத்தேர்வினால் பல்வேறு விளைவுகள் ஏற்படும். பெற்றோர்களே மாணவர்களின் மார்க்குகளுக்காக தவறாக வழிநடத்தும் சூழலுக்கு தள்ளப்படுவார்கள். வலுத்த எதிர்ப்புக்கு பிறகுதான் இந்த முடிவு வந்துள்ளது. எனவே புதிய கல்விக்கொள்கை வந்தாலும் இதில் மாற்றம் ஏற்படாது என நான் நினைக்கிறேன். குழந்தைகளின் கற்றல் திறனை நீங்கள் அளக்கவே முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு எந்த முறை எளிமையாக உள்ளதோ அதன் வாயிலாகத்தான் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், “இது மக்களாட்சி மாண்புக்குட்பட்டு தமிழக அரசு நடந்து கொண்டதாகவே நான் பார்க்கிறேன். இது ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி. நீண்ட ஆலோசனைக்கு பிறகு அரசு இந்த நல்ல முடிவை எடுத்துள்ளது. பல்வேறு ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்களை அழைத்து பேசி, இப்போது இருக்கும் மாணவர்களுக்கு நெருக்கடி கொடுக்காத வகையில் மதிப்பீட்டு முறையை இன்னும் வலுப்படுத்துவதற்கு அரசு முயற்சி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com