நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பேரவையில் விதி எண் 110ன் கீழ் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்களுக்கு அகவிலைப்படியில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் என்றும், இதனால் சுமார் 2 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுவர் எனவும் அறிவித்தார். விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
வேளாண்துறையில் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர், 10 கோடி ரூபாய் செலவில் இரண்டரை கோடி பனை விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும், சிறுதானிய பயிர் சாகுபடிகளை ஊக்குவிக்க 13 கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும், 243 கிராம அளவிலான பண்ணை இயந்திர வாடகை மையங்கள் 19 கோடியே 44 லட்சம் செலவில் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
கன்னியாகுமரியில் தென்னை மதிப்பு கூட்டு மையம் அமைக்கப்படும் என அவர் அறிவித்தார். மேலும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் கடன் வசதி பெற்று தொழில் தொடங்க, நபார்டு வங்கி உதவியுடன் நடப்பாண்டில் 266 கோடி ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படும், மதுரை சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சூரிய சக்தியால் இயங்கும் குளிர்பதன மையங்களை நிறுவ 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
பாசன நீரினை வீணாக்காமல் வயலுக்கு அருகே கொண்டு செல்ல பாசன நீர்க் குழாய்களை நிறுவுதல் உள்ளிட்ட பணிகளுக்கு 116 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவிடப்படும் என்று அறிவித்தார். பல்வேறு இடங்களில் உள்ள கோயில்கள் புனரமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.