பருவ மழை காலத்தில் மேற்கொள்ள வெண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது அதிகாரிகளுக்கு முதல்வர் பல உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதில், மாநில பேரிடர் மீட்புப் படையை வலுப்படுத்த கூடுதல் உபகரணம், கருவிகள் வாங்க ரூ. 30. 27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மழை காலங்களில் விழும் மரங்களை அகற்றதேவையான ஆட்கள், இயந்திரங்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் பருவ மழையின் போது தொற்று நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கவும் மருந்துகளை இருப்பு வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்களை போதுமான அளவில் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் மாநகராட்சி, மீன்வளத்துறைக்கு உபகரணங்கள் வாங்க ரூ. 8.25 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பருவமழை முன்னேற்பாடு குறித்து தலைமைச் செயலர் தலைமையில் முப்படை ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும் எனவும் மழை காலங்களில் உயிர்சேதத்தை தவிர்க்க அனைத்து துறை செயலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னேற்பாடுகள் குறித்து அக்டோபர் திங்கள் முதல் வாரத்தில் இருந்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.