“எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைகளை மனதில் வைத்து பெண்கள் முன்னேற வேண்டும்” என மகளிர் தினத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் அதிமுக சார்பில் ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இதில், கலந்து கொண்டஅதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 50 கிலோ கேக் வெட்டி மகளிர் அணி செயலாளர் வளர்மதிக்கு ஊட்டி விட்டதோடு மகளிர் அணி நிர்வாகிகளுக்கும் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் பேசிய அவர், “தனது இல்லத்தில் இருந்து ஜெயலலிதா வரும்போது, மகளிர் அணி நிர்வாகிகள் தெருவெங்கும் நின்று உற்சாகமாக வரவேற்பார்கள். அந்த நிகழ்வை நான் நினைத்துப் பார்க்கிறேன். ஒரு பெண் முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டு மக்கள் அவருடைய ஆட்சி காலத்தில் நிறைய நன்மைகளை பெற்றார்கள். இந்திய நாட்டுக்கு வழிகாட்டியாக இருந்தவர், முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும் - ஆள வேண்டும் என திறமையோடு வழிநடத்தி சென்றவர் ஜெயலலிதா.
நம்மை ஈன்ற தாய்க்கும், நம்மை காக்கும் பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறேன். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பல்வேறு மகளிர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தொட்டில் குழந்தைகள் திட்டம், விலையில்லா சானிட்டரி நாப்கின், மானிய ஸ்கூட்டர் என பல திட்டங்களை நிறைவேற்றினார். ஆனால் இதையெல்லாம் தற்போது உள்ள அரசு நிறுத்திவிட்டது.
பெண்கள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடன் வாழ்வில் சந்திக்கும் தடைகற்களை படிகற்களாக்கி வாழ்வில் முன்னேற வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா கருத்துகளை மனதில் வைத்து வாழ்வில் முன்னேறி காட்ட வேண்டும். பெண்களை வணங்குவோம், பெண்களை போற்றுவோம், பெண்களால் பெருமைகொள்வோம்” என்றார்.