நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள செலம்ப கவுண்டர் பூங்காவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “திமுகவின் மதிப்பு சரிந்து வருவதாக கூறும் எதிர்க்கட்சித் தலைவர் கனவு உலகத்தில் இருக்கிறாரா? தமிழ்நாட்டில் மதிப்புமிக்க ஆட்சியை திமுக வழங்கி வருகிறது. திமுக மீதான எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளை மக்கள் பார்த்து நகைச்சுவையாக கடந்து செல்வார்கள் என அவருக்கு தெரியவில்லை" என்று விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் வனவாசி பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார்.
அவர் கூறுகையில், “ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரே இயக்கம் அதிமுக; அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டனும் உயர் பதவிக்கு வரமுடியும். திமுகவில் கருணாநிதி குடும்பத்தினர் மட்டும்தான் கட்சியில் உயர் பொறுப்பிற்கு வரமுடியம். குறிப்பாக கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஆண் வாரிக்கள்தான் அக்கட்சிக்கு தலைவராக முடியும்” என்று விமர்சித்தார்.
மேலும் பேசிய அவர், “திமுக கூட்டணியில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் கூட்டணிக்குள் புகைச்சல் வெளிப்படுகிறது. வலிமையான அதிமுக பூத்துக் குலுங்கும் மலர் போன்றது. மலராக அதிமுக பூத்துக் குலுங்க; மக்கள் எனும் தேன் ஆதரவாய் இருக்க; கூட்டணி கட்சிகள் தேனீக்களாய் தேடி வரும்; 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிக்கொடி நாட்டும்” என்று கவிதையாக பேசி நம்பிக்கை தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர், “ஸ்டாலின் சொல்வதுபோல் நான் கனவு காணவில்லை; அவர்தான் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்; அவரது பகல் கனவு பலிக்காது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் திமுகவுக்கு சரிவு; அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காக ஸ்டாலின் கூட்டணி அமைக்கவில்லை. தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்தியில் பொறுப்பு வாங்க வேண்டும் என்பதற்காக அமைத்த கூட்டணி அது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்றனர். ஆட்சிக்கு வந்து 41 மாதங்கள் ஆகியும் ரத்து செய்யவில்லை. நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக சொன்ன உதயநிதி ஸ்டாலின் இன்னும் அந்த ரகசியத்தை தேடிக் கொண்டிருக்கிறார். மக்களை ஏமாற்றுவதுதான் திமுகவின் கொள்கை. ஆனால், அதிமுக ஆட்சியில் மாணவ மாணவியரின் மருத்துவ கனவை நனவாக்க அரசுப்பள்ளி மாணவ மாணவியிருக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது; இப்படி திமுக ஒரு சாதனையை சொல்ல முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.